Thursday, November 19, 2009

மின்னக்கல் மாரியம்மன் பண்டிகை - 2009.

மின்னக்கல் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகை - 2009.


29-10-2009 வியாழக்கிழமை காலை,
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்புறம், மின்னக்கல் ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையில் பக்திப் பரவசத்துடன் அதிர்வேட்டு முழங்க, கம்பம் நடுதலுடன், திருவிழா இனிதே தொடங்கியது.

10-11-2009 செவ்வாய்க்கிழமை இரவு,
புஷ்ப விமானத்தில் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் ரதோற்சவம், குறவன் குறத்தி நையாண்டி மேளத்துடன் வான வேடிக்கையும் நடைபெற்றது.
உர்ப் பொதுமக்கள், வந்திருந்த சொந்த பந்தங்கள் என அனைவரின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைத்தன.

11-11-2009 புதன்கிழமை,
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் பணடிகையை சிறப்பிக்கும் விதமாக,
மின்னக்கல் ஸ்டார் பிரண்ட்ஸ் நண்பர்கள் குழு வழங்கிய நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் இளையோர்களின் பேராதரவோடு இனிதே துவங்கி வெற்றிகரமாக நடைபெற்றது.

மேலும் அன்று இரவு, மின்னக்கல் ஸ்ரீ வினாயகா பிரண்ட்ஸ் வழங்கிய இரண்டாம் ஆண்டு நியூ ஸ்ருதி திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி, அதிரடி இசை முழங்க ரசிகப் பெருமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்தது.


அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகையின் முக்கிய நாளான
12-11-2009 வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை, மின்னக்கல் மக்கள் தம் மனங்களில் நிறைவேறிய வேண்டுதலுக்காகவும்,
மேலும் பல வேண்டுதல் நிறைவேறவும் வேண்டி அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மனை சொந்த பந்தத்துடன் வணங்கி,
பக்திப் பரவசத்துடன் கிடா, கோழி பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அம்மன் அழைப்பு,
சிறப்பு பூஜைகள்,
கிடா வெட்டு, கோழி அறுப்பு, மகா தீபாரதனை
போன்றவைகள் யாவும்,
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் மேல் மின்னக்கல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது.

அன்று மாலை மேள தாள அதிர்வேட்டு முழங்க மின்னக்கல் இளைஞர்கள் ஆட்டத்துடன், மற்றும் மின்னக்கல் பெண்கள் அணிசேர ஜோதிமயமாக மாவிளக்கு ஏந்தி அக்னி கரகம் இணைந்து ஊர்வல அணிவகுப்பு என மாவிளக்கு புஜைகள் ஊர்ப் பொதுமக்கள் சூழ பக்திப் பரவசத்துடன் சிறப்புற நடைபெற்றது.
அன்று இரவு கம்பம் பிடுங்குதலும் நடைபெற்றது.


13-11-2009 வெள்ளிக்கிழமை,
வண்டி வேடிக்கை மற்றும்
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் குழுவினர் வழங்கிய பூங்கரகாட்ட ஊர்வலம் பண்டிகைக்கு சிறப்பு சேர்த்தது.
மேலும் அன்று இரவு, மின்னக்கல் கலைத்தென்றல் நண்பர்கள் குழுவின் இரண்டாம் ஆண்டு படைப்பாக நியூ ஸ்டார் பாய்ஸ் திரைப்பட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
எட்டு திக்கிலிருந்தும் வந்திருந்த ரசிகப் பெருமக்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்து, குடும்பம் குடும்பமாக வந்திருந்தோரை குதூகலப்படுத்தியது இந்நிகழ்ச்சி.


14-11-2009 சனிக்கிழமை,
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகையின் நிறைவு விழாவாக மஞ்சள் நீர் உற்சவம், ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றது.


15-11-2009 ஞாயிற்றுக்கிழமை, மின்னக்கல் ஊரிலே இதுவரை யாரும் கண்டிராத வகையில் உரியடி விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அடுத்த பண்டிகை எப்போது வரும் என்ற ஏக்கத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தி சென்றது.


நாகரீகம் எனும் போர்வையில் மனித உடலும் மனமும் இயந்திரத்தனமாக மாறிவரும் இன்றைய சூழலில், இதுபோன்ற பண்டிகைகள், மக்களின் மனங்களை இணங்கச் செய்து, சொந்த பந்தங்களை இணைத்து, குடும்ப உறவுகளை வலுவாக்கி, சமுதாய கட்டமைப்பில் மனித நேயத்தை வளர்க்க பேருதவி புரிந்து வருகிறது என்றால் அது மிகையில்லை !!

-இ .செல்வராஜ்,
சூளைமேட்டுத்தெரு,
மின்னக்கல்.
9942833661



.